MyMenu1

Tuesday, January 17, 2012

இயல்வது கரவேல்

ஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஒரு ஏழை தன் மனைவியுடன்  வாழ்ந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன் மட்டுமே கிடைத்தது. அவன் வீட்டிற்கு சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிகொண்டு தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்கு சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்கு போதவில்லை. இன்னும் எதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச்  சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, "உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்கு தேவையான மீன்கள் கிடைக்கும்." என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


உங்களால் பிறருக்கு செய்ய முடிந்ததை மறைக்காமல் செய்யுங்கள்  குழந்தைகளே!

3 comments:

  1. நன்றாக இருக்கிறது கிரேஸ்!!. தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்கள் கிரேஸ்!!.

    ReplyDelete
  2. முந்திய பின்னூட்டத்தில் சொல்ல மறுந்துட்டேன், வேதன் மிக அழகான தமிழ் பெயர், இது வரைக்கும் நான் கேள்விப்பட்டதில்லை :-)

    ReplyDelete
  3. :-) என் கற்பனையில் உயிர்த்த பெயர்..ஏற்கெனவே இருக்கிறதா என்று தெரியவில்லை! நன்றி!

    ReplyDelete

I appreciate your valuable comments, Thanks!