MyMenu1

Showing posts with label ஆத்திச்சூடி. Show all posts
Showing posts with label ஆத்திச்சூடி. Show all posts

Tuesday, January 17, 2012

இயல்வது கரவேல்

ஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஒரு ஏழை தன் மனைவியுடன்  வாழ்ந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன் மட்டுமே கிடைத்தது. அவன் வீட்டிற்கு சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிகொண்டு தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்கு சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்கு போதவில்லை. இன்னும் எதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச்  சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, "உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்கு தேவையான மீன்கள் கிடைக்கும்." என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


உங்களால் பிறருக்கு செய்ய முடிந்ததை மறைக்காமல் செய்யுங்கள்  குழந்தைகளே!

Sunday, July 17, 2011

ஆறுவது சினம்

ஒரு அழகான ஊரில் அழகான ஒரு வீடு இருந்தது. அவ்வீட்டில் அன்பு என்று ஒரு பையனும் அவனுடைய தங்கை அனிதாவும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். அன்புக்கு எட்டு வயது. அனிதாவுக்கு நான்கு வயது.  ஒரு நாள் பள்ளி விட்டு வந்தபின்னர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பொம்மை  காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அன்பு வேறு ஏதோ எடுக்க உள்ளே சென்றான். அப்பொழுது ஆசையாக அவனுடைய காரை எடுத்த அனிதா அதை தெரியாமல் உடைத்துவிட்டாள். உள்ளிருந்து வந்த அன்பு உடைந்த காரைப் பார்த்தவுடன் கோபம் கொண்டான். "ஏன் என் கார உடைச்ச?" என்று கத்திகொண்டே வந்தவன் கீழே இருந்த அனிதாவின் பொம்மையை தூக்கி எறிந்தான். அது ஒரு மண்ணில் செய்த தஞ்சாவூர் பொம்மை. அழகான அந்த பொம்மை உடைந்து சிதறியது. தஞ்சாவூர் சென்ற பொழுது அவர்கள் அப்பா வாங்கிவந்தது. உடனே அனிதா அழ ஆரம்பித்தாள். பொம்மை உடைந்தவுடன் அன்புக்கு பாவமாக இருந்தது. தான் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான். கோபத்தை அடக்கியிருந்தால் அழகான பொம்மை உடைந்திருக்காதே என்று நினைத்தான். அவ்வைப்பாட்டி கோபம் அடக்கப்படவேண்டும் என்பதற்குதான்   "ஆறுவது சினம்" என்று சொன்னதைப் புரிந்துகொண்டான்.

கோபத்தை அடக்க கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே!

Friday, June 10, 2011

அறம் செய்ய விரும்பு

ஆலன் பள்ளியிலிருந்து ஒரு நாள் மகிழ்வுலா ஏற்பாடு செய்திருந்தனர். ஆலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானான். அம்மா செய்து கொடுத்த ஆலூப் பராத்தா, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விட்டான். அவர்கள் சென்றது ஒரு பூங்கா. பல வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் களித்தனர். செடிகளை மயில், யானை போலவெல்லாம் வடிவாய் வெட்டி அழகு செய்திருந்தனர். அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர் குழந்தைகள். பிறகு சாப்பிடும் நேரம் வந்தபொழுது ஆசிரியர் குழந்தைகளை புல்வெளியில் வட்டமாக அமரச்செய்தார். ஆலனும் அமர்ந்து தன்னுடைய சாப்பாட்டை எடுத்தான். அப்பொழுது அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். அவன் பசியோடு அனைவரது சாப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆலன் ஆசிரியரிடம் சென்று, "அறம் செய்ய விரும்புன்னு படித்தோமே, அவனை கூப்பிடட்டுமா?" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான்.  பயந்து கொண்டே வந்த அந்த சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்ளைகளும் "ஒ இதுதான் அறம் செய்ய விரும்புரதா?" அப்படின்னு புரிந்து கொண்டார்கள். பிறகு அனைவரும் புல்வெளியில் விளையாடி விட்டு கிளம்பினர். மகிழ்வுலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பயனுள்ளதாகவும் அமைந்தது.